அருள்மிகு அங்காள பரமேஸ்வரி வரலாறு

அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் வரலாறு



இந்த உலகில் அனைத்திற்கும் ஆதியும் அந்தமும் ஆன அன்னை ஆதிபராசக்தி எத்தனையோ அவதாரம் எடுத்து அரக்கர்களையும், அதர்மத்தையும் அழித்து மக்களையும் மற்ற உயிர்களையும் காத்து வருகின்றாள். ஆனால் இறைவனை காக்க இறைவி எடுத்த அவதாரமே அங்காள பரமேஸ்வரி அம்மன் அவதாரம். இந்த அம்மன் தமிழகமெங்கும் அங்காளம்மன், அங்காளபரமேஸ்வரி, பெரியாயி, பூங்காவனத்தம்மன், பெரியாண்டிச்சி என்று பல பெயர்களில் மக்களால் வணங்கப்பட்டு வருகிறாள்.

தட்சன் வேள்வி:-
தட்சன் சிவபெருமானை நோக்கி தவமிருந்து அன்னை பார்வதி தேவி தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்ற வரம் பெற்றான். பார்வதி தேவி அவ்வாறே தக்கனின் மகளாக பிறந்தாள். அவளுக்கு தாட்சாயணி என்று பெயர் வைத்து வளர்த்து வந்தான். தாட்சாயணி தேவிக்கு திருமண வயது வந்ததும் சிவபெருமான் தட்சனுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். தக்கன், சிவபெருமானே தனக்கு மருமகன் ஆகிவிட்டார் என்று ஆணவத்துடன் இருந்தான். ஒருமுறை தட்சன் தனது மகளையும் மருமகனையும் காண கயிலாயம் சென்றான். அங்கிருந்த பூதகணங்கள் தட்சனை மறித்தனர். பூதகணங்களிடம், தட்சன் நான் சிவபெருமானின் மாமனார் என்றான். இதைக்கேட்ட பூதகணங்கள் நகைத்தனர். பூதகணங்களிடம் அவன் பட்ட அவமானத்தால் தட்சன் எப்படியாவது சிவபெருமானை அவமதிக்க வேண்டும் என்று நினைத்து


பிரயாகை புண்ய பூமியில் மாபெறும் வேள்வி (யாகம் ) ஒன்றை ஏற்பாடு செய்தான். இந்த யாகத்திற்கு பிரம்மா, விஷ்ணு, தேவர், முனிவர்கள் அனைவருக்கும்  அழைப்பு விடுத்தான்  ஆனால் தனது மகளான தாட்சாயணிக்கும் சிவபெருமானுக்கும் அழைப்பும் விடுக்கவில்லை, அவிர்பாகமும் கொடுக்கவில்லை. இதை அறிந்த தாட்சாயணி தேவி, தந்தையான தட்சனிடம் சென்று நியாயம் கேட்டாள். நீயே அழையா விருந்தாளியாக வந்திருக்கிறாய் சரி வந்ததும் வந்தாய் வேள்வியில் கலந்து கொள் என்றான். ஆனால் அந்த சிவனை அழைக்கவும் மாட்டேன், அவிர்பாகமும் கொடுக்க மாட்டேன் என்றான். மனம் கலங்கிய கண்களுடன் தாட்சாயணி தேவி சிவனை நிந்தனை செய்த உனக்கு நான் மகளாக இருக்கமாட்டேன் இந்த யாகம் அழியக்கடவது என்று சாபமிட்டுவிட்டு அந்த வேள்வி தீயில் இறங்கி தன்னை மாய்த்துக் கொண்டாள் தாட்சாயணி தேவி.

சக்தி பீடம்
தாட்சாயணி தீயில் மாண்டதை அறிந்த சிவபெருமான் வீரபத்திரனை அனுப்பி தட்சனையும் , யாகத்தையும் அழித்தார். சிவபெருமான் தீயிலே இருந்த தாட்சாயணி உடலை எடுத்து தோல் மீது போட்டுக்கொண்டு பித்து பிடித்தவர் போல் ஆகாயமார்கத்தில் அகோர தாண்டவம் ஆடிக்கொண்டு இருந்தார். உலக நன்மைக்காக மகாவிஷ்ணு தன் கையில் இருந்த சுதர்சன சக்கரத்தை தாட்சாயணி உடலின் மீது செலுத்த அது என்ன 51 துண்டுகளாக சிதறி இந்த பாரத தேசத்தில் 51 இடங்களில் விழுந்தது.


இதுவே பின்னாளில் சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படுகிறது. அப்படி முதலில் விழுந்த உறுப்பு (வலதுகை) தண்டகாருண்யம் என்ற காட்டு பகுதியில்  விழுந்தது இதுவே பின்னாளில் மேல்மலையனூர் என்று அழைக்கப்படுகிறது.


அரக்கர்கள் இம்சை:-
அரக்கர் குலத்தில் பிறந்த சுந்தரன், சுலோபன் என்ற சகோதரர்கள் பாசத்திலும், அன்பிலும் அவ்வளவு ஒற்றுமையாக இருந்தார்கள். அவர்கள் பிரதேவனை நோக்கி தவமிருந்து சாகாவரம் கேட்டனர். பிரம்மா, சாகாவரம் தரமுடியாது நீங்கள் எவற்றால் சாகக்கூடாது என்று கேளுங்கள் தருகிறேன் என்றார். உடனே சுந்தரனும் சுலோபனும் ஆலோசித்து,  எங்கள் இருவரின் மரணம் எப்படி நிகழவேண்டுமானால் சுந்தரனுடைய உயிர் சுலோபனின் நகக்கனுவிலும், சுலோபனுடைய உயிர் சுந்தரரின் நகக்கனுவிலும் இருக்க வேண்டும். எங்களுக்குள் சண்டை வந்து நகம் மாறி மாறி படும்போது தான் எங்கள் உயிர் போகவேண்டும் என்று வரம் பெற்றனர். (ஏனைனில் அவர்களின் ஒற்றுமை மீதும், அண்ணன் தம்பி பாசத்தின் மீதும் உள்ள நம்பிக்கை).

வரம் பெற்ற ஆனவத்தில் சுந்தராசூரனும், சுலோபாசூரனும் தேவர், முனிவர்களை இம்சித்தனர். இவர்களை அழிப்பதற்காக பிரம்ம தேவர் ஒரு யாகம் செய்து திலோத்தம்மை என்ற அழகான மங்கையை உற்பணம் செய்தார்.
திலோத்தம்மை அந்த அரக்கர்களிடம்  சென்று ஆடி பாடி மயக்கி இருவரையும் திருமணம் செய்து கொள்வதாக சொன்னாள். இருவரையும் எப்படி திருமணம் செய்வாய் நீ என்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றான் சுந்தரன். சுலோபனும் அவ்வாறே சொன்னான்.
திலோத்தம்மை அப்படியானால் இருவரும் மல்யுத்தம் செய்யுங்கள் யார் வெற்றி பெருகிரிர்களோ அவரை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்றாள். சூது என்று அறியாத அரக்கர்கள் பெண்மோகத்தால் வாங்கிய வரத்தை மறந்து இருவரும் சண்டை செய்ய இருவரின் நகக்கனுக்கள் மாறி மாறி பட்டு இருவரும் இறந்து விடுகின்றனர்.


அரக்கர்களை அழித்துவிட்டு சத்யலோகம் ( பிரம்ம லோகம்) சென்ற திலோத்தம்மையை பிரம்மன் காம இச்சையுடன் பார்த்தார். அதற்கு அவள் நீங்கள் என்னை உருவாக்கியதால் நீங்கள் எனக்கு தந்தையாவிர் என்றாள். காமயிச்சையுடன் இருந்த பிரம்மன் அந்த பெண்ணை துரத்த ஆரம்பித்தார். அந்த பெண் பயந்து ஓடிச்சென்று கயிலாயத்தில் தஞ்சம் புகுந்தாள். துரத்திக்கொண்டு வந்த பிரம்மா சோற்வின் காரணமாக தெரியாமல் சிவபெருமான் அமரும் ஆசனத்தில் அமர்ந்து ஓய்வெடுத்தார். இதை தூரத்தில் இருந்து பார்த்த பார்வதி தேவி, வழக்கம் போல படியளக்க சென்ற தனது கணவர் வந்துவிட்டார் என்று எண்ணி தகுந்த பாதபூஜைகள் செய்து வடுகிறாள் பார்வதி. பிரம்மா எழுந்து இதென்ன எனக்கு பாதபூஜை செய்கிறீர்கள் என்று கேட்க, பார்வதி தேவி திகைத்து போய் கோபத்துடன் என் சுவாமி அமரும் ஆசனத்தில் நீ ஏன் அமர்ந்தாய் என்று கேட்டாள். அதற்கு பிரம்மன் ஏன் நான் அதில் உட்காரக்கூடாதா, எனக்கும் ஐந்து தலை சிவனுக்கும் ஐந்து தலை, ஏன் எனக்கு அந்த தகுதி இல்லையா என்று ஆணவத்துடன் பேசினான். அச்சமயம் அங்கு வந்த சிவபெருமானிடம், பார்வதி சுவாமி இவன் அகங்காரத்தை பாருங்கள் என்றாள். சிவபெருமான் இப்பொழுதே பிரம்மதேவரின் ஆனவத்திற்க்கு காரணமான அவன் ஐந்தாவது தலையை கொய்து விடுகிறேன் என்று தனது நகத்தால் பிரம்மனின் ஐந்தாவது தலையை கிள்ளினார் சிவபெருமான்.

பிரம்மதேவரின் தலையை கொய்ததால் பிரம்மஹத்தி தோஷமமும், அந்த தலையானது கபாலமாக மாறி சிவபெருமானின் கரத்திலேயே பற்றிக்கொண்டது.
இந்த பிரம்ம கபாலத்தில் எவ்வளவு உணவு போட்டாலும் நிரம்பவில்லை அத்தனையும் அந்த கபாலமே தின்றுவிடுகிறது. அப்படியே சிவபெருமான் பித்துபிடித்து சுடுகாடு சுடுகாடாக  அலைந்து சாம்பலை புசித்து  ஊர் ஊராக சென்று கபாலமேந்தி பிச்சையெடுத்து பிச்சாண்டியாக அலைகிறார்.


பிரம்ம தேவரின் தலை கொய்யப்பட்ட செய்தியை அறிந்த சரஸ்வதி தேவி, என் சுவாமியின் இந்த நிலைக்கு, பார்வதி நீதானே காரணம் அதனால் நீயும் பித்துப்பிடித்து அலைந்து மண்புற்றாக போகக்கடவாய் என்று சாபமிட்டாள் சரஸ்வதி.

சிவனை பிடித்த பிரம்மஹத்தி தோஷம்:-
சிவபெருமானோ பிரம்மஹத்தி தோஷத்தால் அலைந்து திரிகிறார்.  பார்வதி தேவியோ, சரஸ்வதி சாபத்தால் அலைகிறாள்.  அச்சமயம் பார்வதி தேவி, சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்க செய்வதறியாது தவித்த போது மகாவிஷ்ணு தோன்றி தங்கையே பார்வதி நீ தண்டகாருண்யம் ( மேல்மலையனூர்) சென்று  சரஸ்வதி சாபத்தின்படி மண்புற்றாக தவமிரு என்றார்.
    அதன்படியே அகோர உருவுடன் அலைந்த பார்வதி தேவி திருவண்ணாமலையில்
உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி எழுந்து அகோர உருவம் மாறி ஒரு வயதான மூதாட்டி போல் உருவெடுத்து மேல்மலையனூர் நோக்கி சென்றாள். அப்படி செல்லும் வழியில்
எரும்பூண்டி என்னும் கிராமத்தில் ஒரு மலையின் மீது அமைந்துள்ள  வீரட்டேஸ்வரர் திருக்கோவிலை அடைந்து அங்கே வீற்றிருக்கும் சிவபெருமானை வணங்கி வலம் வந்து தியானம் செய்துவிட்டு பின்னர் மலையில் இருந்து இறங்கி வந்து கீழே சற்று நேரம் அமர்ந்து விட்டு ( அப்படி மூதாட்டி வடிவில் இருந்த அங்காளபரமேஸ்வரி அமர்ந்த அந்த இடத்தில் இன்றளவும் எரும்பூண்டியில் நடைபெறும் அம்மன் கோவில் திருவிழாக்களின் போது அங்காளம்மனுக்கு எதிர்நோக்கிய பூஜை செய்யப்படுகிறது. ஏகாலி வீட்டில் இருந்து எடுத்து வந்த வேட்டியில் அம்மன் பூங்கரகங்களை இறக்கி வைத்து பூஜை செய்வர். இவர்கள் அக்கா தங்கைகள் ஏழுபேர் என்பார்கள் இதில் எட்டியம்மன், காளியம்மன், மாரியம்மன், முத்தாலம்மன், முகமாரியம்மன், கெங்கையம்மன் இவர்கள் அறுவரும் எரும்பூண்டியில் உள்ளனர், இவர்களோடு மேல்மலையனூரில் குடிகொண்டுள்ள அன்னை அங்காளபரமேஸ்வரி அம்மனோடு ஏழுபேர் என்பார்கள்.) பின்பு வயல்வெளிகள், ஓடை, ஏரிகளைக் கடந்து செல்லும் வழியில் அந்தி பொழுதானதால் அன்றிரவு தாயனூரில் தங்கியிருந்து மறுநாள் விடிந்து தண்டகாருண்யம் நோக்கி சென்றாள். தாகம் ஏற்பட்டதால் அங்கே பனங்கல் இறக்கும் சாணர்களிடம் தண்ணீர் கேட்டாள்.
அவர்கள் தரமறுத்ததால் இந்த ஏரிக்கரையில் பனைமரங்கள் இல்லாமல் போகட்டும் என்று சாபமிட்டாள் மூதாட்டி வடிவில் இருந்த அங்காளபரமேஸ்வரி. பின்பு தண்டகாருண்யம் அடைந்து அங்கே பூங்காவனம் நடுவே சரஸ்வதி சாபத்தின்படி மண்புற்றாக தவமிருந்தாள். ( பூங்காவனம் நடுவே தவமிருந்ததால் இந்த அம்மனுக்கு பூங்காவனத்தம்மன் என்று பெயர்).

அங்காள பரமேஸ்வரி அவதாரம்:-
     சிவபெருமான் கபாலத்தை ஏந்தி ஊர் ஊராக பிச்சை எடுத்து அலைந்து திரிந்து அவரும் தண்டகாருண்யம் வந்தடைந்தார். அவர் அங்கே மண்புற்றாக தவமிருக்கும் அங்காளம்மனிடம் பிச்சை கேட்டார். அப்போது அங்காள பரமேஸ்வரி, மகாவிஷ்ணுவின் ஆலோசனைப்படி அறுசுவை உணவு சமைத்து அதனை மூன்று கவலங்களாக ( சோறு உருண்டை) உருட்டி அன்னபூரணியாக சிவபெருமானுக்கு பிச்சை இடுகிறாள்
. முதல் கவலத்தை அந்த பிரம்ம கபாலத்தில் போட,  அந்த பிரம்ம கபாலம் அதை ருசித்து உண்டது, இரண்டாவது கவலத்தையும் ருசித்து உண்டது. அன்னையானவள் மூன்றாவது கவலத்தை பிரம்ம கபாலத்தில் போடுவது போல் போட்டு கீழே இறைத்தாள். உணவின் ருசியின் காரணமாக பிரம்ம கபாலம் சிவபெருமானின் கையை விட்டு இறங்கி இறைத்த உணவுகளை உண்டுவிட்டு பின்பு சிவபெருமானை தேடியது. இதைப்பார்த்த அன்னை அகோரகாளியாக, அங்காள  பரமேஸ்வரியாக அவதாரம் எடுத்து அந்த பிரம்ம கபாலத்தை தனது வலது காலால் மிதித்தாள்.
இதனால் சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. இருந்தாலும் இந்த அங்காளபரமேஸ்வரி அம்மனின் கோபம் தனியவில்லை. அன்னை சாந்தப்படுத்திட தேவர்கள் சக்கரமாகவும், அச்சாணியாகவும் மாறி அம்மனை தேர்பவணி வரச் செய்தார். அன்னை அங்காள பரமேஸ்வரி அங்கேயே அமர்ந்து தன்னை நாடி வரும் பக்தர்களை காத்துரட்சிக்கின்றாள்.


 மூன்றாவது கவலத்தை வாரி இறைத்ததன் நினைவாகவே மயானகொள்ளை கொண்டாடப்படுகிறது.  மற்றொரு வகையில் கூறினால் நிசாசனி உடலை கிழித்து குடலை உருவி மாலையாக போட்டுக்கொண்டு வல்லாளன் பட்டணத்தை கொள்ளையிட்டு தான் மயானகொள்ளை எனப்படுகிறது.


மேல்மலையனூர் பெயர்க்காரணம்:-
  இது நான் செவிவழிக் கேட்ட கதை
 அகோர உருவுடன் இருந்த பார்வதியிடம் மகாவிஷ்ணு நூறு கற்களை கொடுத்து இந்த கற்களை ஒவ்வொன்றாக எடுத்து மேல்நோக்கி போட்டால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மலையாக மாறும் அபபடி நூறாவது கல்லை வீசிவிட்டு நீ ஆகாயமார்கம் விட்டு தரையிரங்கினால் ஒரு சுடுகாடு வரும் அதன் மத்தியில் உள்ள பாறையின் மீது மல்லாந்து படுத்துக் கொண்டு இரு என்றார். அதன்படியே கற்களை வாங்கிய அங்காளபரமேஸ்வரி திருவண்ணாமலை மலையை அடித்தளமாகக் கொண்டு ஒவ்வொரு கல்லையும் மேல் நோக்கி வீச ஒவ்வொன்றும் ஒவ்வொரு மலையாக மாறியது நூறாவது கல்லை வீசிவிட்டு தரையிறங்கி சுடுகாட்டின் நடுவே வட்டப்பாறையில் பெரியாயி என்ற பெயரோடு படுத்தால். இந்த இடமே மேல்மலையனூர் எப்படி என்றால் கற்களை மேல்நோக்கி வீசியதால் மேல், ஒவ்வொன்றும் ஒவ்வொரு மலையானதால் மலை, மொத்தம் நூறு மலை என்பதால் நூறு இதுவே மேல் + மலை+ நூறு - மேல்மலையனூர் என்றானது என்பார்கள்.
 
     இது நான் நாடகங்களிலும், பெரியோர்களிடமும் கேட்ட கதை ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்து விடுங்கள்.


தங்கள் வாசிப்பிற்க்கு நன்றி

Contact:-.  VENKATESAN  8838815687

Whatsapp:- 7502650065


Comments

Popular posts from this blog

எட்டியம்மன் வரலாறு

வீரட்டேஸ்வரர் திருக்கோவில்